கட்டுரை ,
நமக்கான எம்.பி.யை தெரிவு செய்யும் முன்னெடுப்புகளில் புத்தளத்து இளைஞர்கள்
Posted by
Puththelil
Published on
Sunday, October 13, 2013
அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்து நமக்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்ந்துள்ள புத்தளத்து இளைஞர் சமூகம் அதற்கான முன்னெடுப்புக்களை திட்டமிட்டு ஒற்றுமையாக முன்னெடுத்து வருகின்றனர். 1989 முதல் இன்று வரை 25 வருடங்களாக விகிதாசாரத் தேர்தல் முறையில் காணப்படும் விசித்திரங்கள் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்று நமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ள முடியாத கசப்பான அனுபவங்களை எல்லாம் அலசி ஆராய்ந்ததைத் தொடர்ந்து முற்றிலும் சுதந்திரமாக எவருடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இன்றி இளைஞர்கள் இம் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதை அறியவும் அவதானிக்கம் முடிகிறது. இளைஞர்களின் உணர்வுகளும் இது போன்ற முயற்சிகளும் மதிக்கப்பட வேண்டும். வரவேற்கப்பட வேண்டும். பாராட்டப்பட வேண்டும். இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்புக்கு ஒப்பானவர்கள். இளைஞர்கள் ஒரு சமூகத்தின் உயிர் நாடிக்கு ஒப்பானவர்கள். அவர்கள் மனம் வைத்தால் அணி திரண்டால் எதனையும் இலகுவில் சாதிக்க முடியும். எனவே இளைஞர்களின் இந்த சமூகம் சார்ந்த பணியை குறைத்து மதிப்பிடவோ எள்ளி நகையாடவோ நகைப்புக்கிடமாகவோ எதிர் மறையாகவோ பார்க்க வேண்டியதில்லை. பரந்த மனப்பான்மையுடன் முடிந்த வரை அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்க வேண்டும். வழிப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.
அண்மைக் காலமாக இளைஞர்களின் இம் முன்னெடுப்புக்கள் ஊரிலும் சமூக வலையத்தள ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலாக பேசு பொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவர்கள் சுயேற்சைக் குழு அமைத்து அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கப் போகின்றனரா? என்பதே பலராலும் இவர்களை நோக்கி தொடுக்கப்படும் முக்கிய வினாவாகும்.
ஆனால் முதற் கட்டமாக இவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும் பணி என்னவென்றால் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் காலத்தின் கட்டாயமான ஒன்றுபட்டு வாக்களித்து நமக்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டியதன் அவசியத்தை இப்போது முதல் மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமாக முன்னெடுப்பதாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த வேலைத்திட்டம் புத்தளம் நகரத்தில் தொடங்கி மாவட்ட மட்டத்துக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டம், கட்டமாக சமூகத்தில் உள்ள நமது கண்ணியமிக்க உலமாக்கள் பள்ளி நிர்வாகிகள் இஸ்லாமிய அமைப்புக்கள் மதிப்பு மிக்க நமது அரசியல் தலைவர்கள் கல்வி சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் விளையாட்டு கழகங்கள் இளைஞர் அமைப்புக்கள் மாதர் சங்கங்கள் வர்த்தக பெருமக்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் மூத்த அனுபவம் வாய்ந்த சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் சமூக வலையத்தள ஆர்வலர்கள் என்று நீண்டதொரு பட்டியலில் உள்ளவர்கள் உட்பட சமூகத்தின் சகல பிரிவினரும் சந்திக்கப்பட்டு இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடவும் அவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளவும் இந்த இளைஞர்கள் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக இந்த இளைஞர்களின் நகர்வு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை வகுக்க வேண்டிய செயற்திட்டங்கள் வியூகங்கள் தொடர்பில் ஆலோசனை செய்து கலந்துரையாடித் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பொருத்தமான மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆலோசனை சபை.
(ஸூரா அமைப்பு) ஒன்றை உருவாக்குவதாகும் என அறிவிக்கப்படுகிறது. இதற்கான செயற்பாடுகளும் இளைஞர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை சபையின் பணிகள் மிகவும் காத்திரமாக அமையவுள்ளதாகவும் தொடர்ந்தும் சமூக விவகாரங்களுக்கு பங்களிப்பு செய்யவுள்ளதாகவும் இளைஞர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞர்களின் இந்த முயற்சியின் பின்னணியில் எவரையும் அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் அல்லது புதிதாக ஒருவரையோ சிலரையோ அரசியல் அரங்கத்துக்கு அழைத்து வரவேண்டும் அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியை முதன்மைப்படுத்த வேண்டும் அல்லது பிறிதொரு கட்சியை வலுவிலக்கச் செய்ய வேண்டும் எவருடைய பணியையும் குறைத்து மதிப்பிட வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கங்களோ நலன்களோ இல்லை என்பது தௌிவாக இவர்களால் முன்வைக்கப்படுகிறது.
இந்த இளைஞர்களின் இந்த முயற்சி தூய்மையாக அமையுமெனில் அதுவே புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கும் பயணத்துக்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமையட்டும்.
“அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. ஆட்சி அதிகாரத்தை வழங்குபவனும் அதை பறித்துக் கொள்பவனும் அவனே”.
எஸ்.ஆர்.எம். முஹ்ஸி
ஆசிரியர்
ஸாஹிரா தேசிய பாடசாலை
புத்தளம்
1 comments
Readers Comments


October 15, 2013 at 8:51 AM
Its very remarkable efforts and I also wish to participate in this moment