கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தியதால் இருவர் பலி
(எம்.ஏ.ஏ.காசிம் )
புத்தளம் - நுரைச்சோலை லக்விஜய அனல் மின்சார நிலையத்திற்கு அண்மித்த ஆழ் கடலில் மிதந்து வந்த ஒரு வகையான திரவத்தை பருகியதாக கூறப்படும் இரு மீனவர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த திரவத்தை பருகியதாக கூறப்படும் மேலும் இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முனிசாமி விஸ்வா (வயது 50) மற்றும் வீரசிங்க ஆராச்சிலாகே துஷார சம்பத் (வயது 40) ஆகிய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுரைச்சோலை பகுதியில் கரை வலை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு மீனவர்கள் நேற்று மாலை கடலில் மிதந்து வந்த மர்மமான திரவம் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றைக் கண்டெடுத்து அதனை அருந்தியுள்ளனர்.
குறித்த திரவத்தைக் அருந்தியதையடுத்து, அந்த நால்வரும் கடும் சுகவீனமடைந்ததுடன், அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூவரையும் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய இரண்டு மீனவர்களும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், குறித்த மீனவர்கள் அருந்தியது வெளிநாட்டு மதுபானமா அல்லது அது என்ன திரவம்? அது எங்கிருந்து வந்தது? என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




0 comments
Readers Comments