<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

திட்டமிடாது போனால் திண்டாடும் நிலை உருவாகும்

புத்தெழில் ஆசிரியர் தலைப்பு 
16 - 31 மார்ச் 2013

வடமேல் மாகாண சபை தேர்தல் 14-02-2009 அன்று நடைபெற்றது. இதன் படி அடுத்த மாகாண சபை தேர்தல் 2014ல் நடைபெற வேண்டும். எனினும் வடமேல் மாகாண சபை தேர்தல் முன்கூட்டியே நடாத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.

இவ் வருடம் மார்ச் முதல் வாரத்தில் வட மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு மே மாதம் அளவில் தேர்தல் நடாத்தப்படும் என்று ஆரம் பத்தில் கூறப்பட்டது. சிங்கள தமிழ் புது வருடம் மற்றும் வெசக் தினங்கள் இக்காலப் பகுதியில் வருவதன் காரணமாக அந்த தினங்கள் முடிவுற்ற பின் தேர்தலை நடாத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடாத்தப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

எது எப்படி இருப்பினும் புத்தளம் மாவட்டம் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் வடமேல் மாகாண சபை தேர்தலை எதிர் கொள்ளவிருக்கிறது. இதற்காக சிறுபான்மையினரான நாம் என்ன திட்டங்களை வகுத்துள்ளோம். தேர்தலை எவ்வாறு எதிர் கொண்டு எத்தனை மாகாண சபை உறுப்பினர்களை பெற்றுக்கொள்வோம் என்ற விடயகங்களை சந்திக்கு சந்தி நின்று தனி நபர்களாக பேசுகிறேமே அன்றி ஓரிடத்தில் அமர்ந்து ஒற்றுமையாக பேசுவதற்கு இன்னும் தயாரில்லை. ஆனால் சகோதர இனமோ தமது பேச்சு வார்த்தைகளை கலந்துரையாடல்களை என்றோ ஆரம்பித்து விட்டது.

2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே அடுத்த வடமேல் மாகாண சபை தேர்தலுக்காக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதன் பிரகாரம் 526,408 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற் றுள்ளனர். 2009ல் நடைபெற்ற இறுதி வடமேல் மாகாண சபை தேர்தலில் 489,852 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும் 274,014 (55.94வீதம்) பேர் மாத்திரமே வாக்களித்திருந்தனர். 215,838 பேர் வாக்களிக்கவில்லை. இத் தொகை சிறுபான்மையினரின் மாகாண சபை உறுப்புரிமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பலருக்கும் தெரியாது. கடந்த தேர்தலை விட இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்கும் வீதம் மேலும் குறையுமாக இருந்தால் பாதிக்கப்படுவது சிறுபான்மை வேட்பாளர்களே.

ஆளுங்கட்சியிலிருந்து போனஸ் ஆசனத்து டன் 12 உறுப்பினர்களும் ஐ.தே. கட்சியிலி ருந்து 5 உறுப்பினர்களும் இறுதி வடமேல் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். ஆளும் கட்சியிலிருந்து எம்.டீ.எம். தாஹிரும் ஐ.தே. கட்சியிலிருந்து எஸ்.ஏ. எஹியாவூம் தெரிவூ செய்யப்பட்டனர். மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக ஏ.எச். எம். றியாசும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து ஏ.எம். கமறுதீனும் மாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். புத்தளம் மாவட்டத்தின் சிறுபான்மை பிரதிநிதிகள் நான்கு பேர் தற்போதைய மாகாண சபையில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றனர்.

வாக்காளர்களையும் வேட்பாளர்களையும் தொடர்புபடுத்தி அடுத்த தேர்தலுக்காக சிறுபான்மை வாக்காளர்களும் வேட்பாளர்களும் இப்பொழுதே திட்டமிட வேண்டும். சிறுபான்மை உறுப்பினர்களின் உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது இரு தரப்பாரினதும் பொறுப்பாகும். தேர்தலில் போட்டியிட உள்ளோம் என்று மட்டும் கூறி வரும் எதிர்கால வேட்பாளர்கள் செயற்பட ஆரம்பிப்பது மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்பே. அதன் பின்பு என்ன திட்டங்களைத் தீட்டினாலும் யாருடன் பேசுவது எப்படி ஒற்றுமைபடுவது எமது மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டாலும் இருக்கும் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்வது என்பவை யெல்லாம் சாத்தியபடாத விடயமாகிவிடும். சிறுபான்மையினரான நாம் திட்டமிடாதிருந்தாலும் சகோதர இனத்தவர்கள் தேர்தலுக்குத் தயாராகி விட்டனர்.

பல புதிய முகங்களை அடுத்த வடமேல் மாகாண சபை தேர்தலில் நிறுத்தவுள்ளனர். சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் மகன் அமைச்சர் ஒருவரின் சகோதரர் முன்னாள் மாகாண சபை அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் என்று பலர் தேர்தலுக்குத் தயாராகுவதாக அறிய முடிகின்றது. ஆனால் சிறுபான்மை வேட்பாளர்களில் எந்தவித பாரிய மாற்றமும் இடம் பெறாது என்று பெரும்பான்மை வாக்காளர்கள் பேசிக்கொள்கின்றனர். எனவே இனியும் காலந்தாழ்த்தாது சிறுபான்மை வாக்காளர்கள் அடுத்த மாகாண சபை தேர்தலுக்காகத் திட்டமிட வேண்டும். இப்பொழுதே திட்டமிடாது போனால் சிறுபான்மையினர் திண்டாடும் நிலை உருவாகும்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors